×

கலைகளின் தாய்

நன்றி குங்குமம் தோழி

‘காந்தி தாத்தா பாரு
கண்ணாடி போட்டிருப்பாரு
அவர்  கையில் பெரிய தடியே
காணும் தலையில் முடியே’

என்றபடி கையில் உள்ள வீசுகோலால் வில்லில் அடித்தபடி சென்னை சிவானந்தா குருகுலத்தில் ஒரு கணீர் குரல் ஒலித்தது. அந்த குரலுக்கு இல்லச் சிறுவர்கள் கைதட்டி ரசிக்கின்றனர். அந்த குரலுக்கு சொந்தக்காரர், வில்லிசை நாயகி கலைமாமணி பாரதி திருமகன். வில்லிசை என்பது கோயில்களில் நடத்தப்படும் ஒருவகை கலை நிகழ்ச்சி என்று நினைத்திருந்த நமக்கு அது கர்நாடக சங்கீதம் மற்றும் கஜல் கவிதையின் தொகுப்பு என உணர்த்தியது.

பாரதியின் தந்தை கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களும் வில்லிசை கலைஞர். முன்னாள் நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் வசனகர்த்தா. அவரது வில்லிசையில் நகைச்சுவையும், தேசப்பற்றும் மிளிரும். ஒரு முறை அவரின் கச்சேரியில், சுடுகாட்டுக்கு சுவர் அமைக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி விவாதம் நடைபெற்றது.

இந்த பஞ்சாயத்து மூதறிஞர் ராஜாஜியிடம் வருகிறது. பிணமாகி புதைக்கப்பட்டவர்கள் மீண்டும் எழப்போவதில்லை. எனவே அவர்கள் மீண்டும் உயிர் பெற்று தப்பியோடப் போவதில்லை என்பதால் சுடுகாட்டுக்கு சுவர் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார் ராஜாஜி. இந்த சம்பவமே அவர் காெமடி வித்தகர் என்பதற்கு சான்று.

இத்தகைய பெருமை மிகுந்த வித்தகரின் மகள் தான் வில்லிசை பாடகி பாரதி. தமிழில் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளார். தந்தை சுப்புவுடன் 7 வயதில் மேடை ஏறிய பாரதி இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சமுதாயம், பாரதியார், மகாத்மா காந்தி... என பல தலைப்புகளில் வில்லிசை நிகழ்த்தியுள்ளார். பாடுவது, பேசுவது, வில்லடிப்பது என ஒரே நேரத்தில் பல செயல்களை செய்து அஷ்டாவதானியாக திகழ்கிறார். கடம், தபேலா வாசிப்பது, உடுக்கடிப்பது என வில்லிசைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் பணியில் கணவர் திருமகனும், மகன் கலைமகனும் அவருக்கு உறுதுணையாய் நிற்கின்றனர்.

திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட பாரதியின் ஆதங்கம் ஆடல், பாடல் போன்று வில்லிசை தரம் தாழ்ந்து நடத்தப்படுவது கவலையளிக்கிறது என குமுறுகிறார். சென்னை, நெல்லை, கோவை, பெங்களூர், புனே, கேரளா, தில்லி மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், துபாயிலும் இவர்களது இசை ஒலித்துள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் வில்லிசை கச்சேரி நடத்தி வரும் இவர் கலைச்சுடர் மணிசன்மார்க்க மாமணி, வாழ்நாள் சாதனையாளர், கலைமாமணி போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.

கோமதி பாஸ்கரன்


Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!