சாதி, பேதமின்றி கொரோனா இறப்பு உடல்களை அடக்கம் செய்யும் தமுமுகவினர்-பழநியில் மறையாத மனிதநேயம்

பழநி : தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதில் தினமும் பாதிப்புகள் உயர்வு வருவது போல், உயிரிழப்புகள் அதிகளவு ஏற்படுகின்றன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் வழங்கப்படுவதில்லை. வீடுகளுக்கு கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி மின்மயானங்களில் அடக்கம் செய்யப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் பலர் தொற்று பயம் காரணமாக உடலை பெற்று கொள்வதிலும் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுபோன்றவர்களின் உடல்கள் பல இடங்களில் தன்னார்வலர்களால் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அவர்களது உறவினர்களின் விருப்பப்படி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் இறந்தவரின் சமூக முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் பழநிக்கு வேலைக்கு வந்த இடத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உறவினர்களின் வேண்டுகோளின்படி தமுமுகவினர் இறந்தவரின் உடலை பெற்று, அவரது சமூக முறைப்படி சடங்குகள் செய்து எரிவாயு மின்மயானத்தில் அடக்கம் செய்தனர். இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 35 கொரோனா உடல்களை அடக்கம் செய்துள்ளதாக தமுமுகவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்படும் இவர்களது மனிதநேயமிக்க நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: