நீலகிரியில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது-மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பும் படுக்கைகள்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அரசு, தனியார் மற்றும் கோவிட் கேர் மையங்களில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் பதிவாகும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது நாள்தோறும் தொற்று பாதிப்பு 150ஐ தாண்டி பதிவாகி வருகிறது.

நேற்று முன்தின நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்த பாதிவு 11 ஆயிரத்து 475 ஆக உள்ளது. 983 சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரியில் ெதாற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் குன்னூர், கூடலூர், பந்தலூர் கோத்தகிரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன.

நேற்று காலை நிலவரப்படி ஊட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென உள்ள 30 சாதாரண படுக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளது. ஆக்சிஜன் வசதி உள்ள 110 படுக்கைகளில் 2 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது. ஐசியுவில் வார்டில் உள்ள 20 படுக்கைகளில் 1 படுக்கை மட்டும் காலியாக உள்ளது. மொத்தம் உள்ள 160 படுக்கைகளில் 3 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது.

குன்னூர் அரசு மருத்துவமனையில் உள்ள 15 சாதாரண படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. 64 ஆக்சிஜன் படுக்கைகளில் ஐசியுவில் 1 படுக்கை காலியாக உள்ளது. மொத்தம் 80 படுக்கைகளில் 17 படுக்கைகள் காலியாக உள்ளது.கூடலூர் அரசு மருத்துவமனையில் சாதாரண படுக்கைகள் 8ம் நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் படுக்கைகளில் 44 படுக்கைகளில் 12 காலியாக உள்ளது. மொத்தமுள்ள 52 படுக்கைளில் 12 காலியாக உள்ளது.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 13 ஆக்சிஜன் படுக்கைகளில் 2 மட்டுமே காலியாக உள்ளது. மொத்தமுள்ள 16 படுக்கைகளில் 2 மட்டும் காலியாக உள்ளது. பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்ள 10 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளது. குன்னூர் மிலிட்டரி மருத்துவமனையில் 80 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி இளைஞர் விடுதியில் உள்ள 78 படுக்கைகளில் 14 படுக்கைகள் காலியாக உள்ளது.

இதுதவிர நேற்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையங்களில் மொத்தமுள்ள 329 படுக்கைகளில், 66 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 130 படுக்கைகளில் 60 படுக்கைகள் காலியாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள  நிலையில், அரசு, தனியார் மற்றும் கோவிட் கேர் மையங்களில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.  பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories: