ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வசதி-சொந்த செலவில் விஜய்வசந்த் எம்.பி வழங்கினார்

நாகர்கோவில் :  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் விஜய்வசந்த் எம்.பி ஆம்புலன்ஸ் வழங்கினார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக  குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரியிடம் வழங்கினார். கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிராகஷ், டாக்டர் ரெனி மோள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக விஜய் வசந்த் எம்.பி நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு   சென்று அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவர்களின் தேவை, நோயாளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவை மற்றும் தடுப்பூசியின் தேவை தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். இந்த தட்டுப்பாடு ஒரு சில நாட்களில் தீரும். தமிழக அரசு இதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு சில நாட்களில் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி கிடைக்கும்.

பொதுமக்கள் தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்போது தடுப்பூசி தேவைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாடுகள் தடுப்பூசி கொடுக்க முன்வந்தால் அதனை வரவேற்று ஊக்கப்படுத்தி வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: