குமரியில் சாரல் மழை நீடிப்பு குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை பேரலைகளுக்கு வாய்ப்பு-இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.

 அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 2.5 மீ முதல் 3.4 மீ உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (14ம் தேதி) முதல் 16ம் தேதி வரை இந்தநிலை காணப்படும். அதேபோன்று குமரி - கேரள கடல் எல்லையான பொழியூர் முதல் கேரள மாநிலம் காசர்கோடு வரையிலான கடல் பகுதியில் 3 முதல் 3.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று பகல் பொழுது முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. அதிகபட்சமாக சிற்றார்-1ல் 38 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறையில் 12.6, பெருஞ்சாணியில் 10.4, புத்தன் அணையில் 10.2, சிற்றார்-2ல் 26, முள்ளங்கினாவிளையில் 35 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.60 அடியாகும். அணைக்கு 218 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 123 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 54.90 அடியாகும். அணைக்கு 116 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-1ல் 7.60 அடியும், சிற்றார்-2ல் 7.71 அடியும், பொய்கையில் 16.80 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 19.03 அடியும், முக்கடலில் 0.5 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Related Stories: