கேரளாவுக்கு கடத்திய மது பாட்டில்கள் பறிமுதல்

கூடலூர் : தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திச் சென்ற மதுபாட்டில்களை, குமுளியில் கேரள கலால் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுக்குள் கொண்டு வர, தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, தமிழகத்தில் இருந்து குமுளி வழியாக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்கின்றன. நேற்று மாலை குமுளி எல்லையில் கேரள கலால்துறை சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர்கள் ராய், போலீசார் ராஜ்குமார், ரவி, சஜிமோன், அனீஷ் உட்பட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்  15 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், வாகனத்தில் வந்தவர் குமுளி அருகே உள்ள கருவூலம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், தமிழகத்திலும் கேரளாவிலும், தற்போது மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், இந்த மதுபாட்டில்களை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரிய வந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த கேரள கலால் துறை போலீசார், ஈஸ்வரனை கைது செய்தனர். பின் மதுபாட்டில்களை கடத்தியதற்காக வண்டிப்பெரியார் கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Related Stories: