நீலகிரியில் நடந்த சம்பவம் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வனத்தில் பதுங்கிய பழங்குடியினர்

ஊட்டி :  கொரோனா தடுப்பூசிக்கு பயந்து பழங்குடியினர் வனத்துக்குள் பதுங்கிய நிகழ்வு நீலகிரி மாவட்டத்தில் நடந்தது.

நீலகிரி  மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு  நாயக்கன் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 ஆயிரத்து 32 பேர் உள்ளனர். இதில் 45  வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 8,779 பேர். 18 வயது முதல் 44 வயது வரை  உள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 656.

கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சம்  காரணமாக பழங்குடியினர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். சிறியூர்,  ஆனைகட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு  தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் சென்றபோது அவர்கள் அனைவரும்  வனத்திற்குள் சென்று  பதுங்கிக் கொண்டனர்.  

கொரோனா முதல் அலையின்போது  பழங்குடியின மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில், இரண்டாவது அலை  தீவிரமடைந்துள்ள நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பழங்குடியின மக்கள்  பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள்தொகை  ரீதியாக குறைவாக உள்ள அவர்களிடம் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும்  பொருட்டு விழிப்புணர்வு  ஏற்படுத்தி தடுப்பூசி போட வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்  தொடர்ச்சியாக மசினகுடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ஆனைக்கட்டி  பழங்குடியின கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்  முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று  பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அவர் கூறும்போது, ‘‘பழங்குடியின மக்கள்  மத்தியில் தடுப்பூசி போட்டு கொள்வதில் தயக்கங்கள் உள்ளன. இதில்  தயக்கத்திற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. தடுப்பூசியின்  தேவை அதிகரித்துள்ள நிலையில் பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம்  அளித்து அவர்கள் இருக்குமிடத்திற்கே வந்து தடுப்பூசி போடப்படுகிறது. எனவே  பழங்குடியின மக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

பழங்குடியின  மக்கள் தங்கள் பகுதிகளில் திருவிழாக்கள் மற்றும் வீடுகளில் நடக்கும் சுப  காரியங்கள் போன்ற நிகழ்வுகளை தங்களது குடும்பத்தினடன் மட்டுமே செய்து  கொள்வது நல்லது. அனைவரையும், அழைத்து விழா நடத்தும்போது தொற்று எளிதாக  பரவுகிறது. எனவே சுப காரியங்களை எளிமையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில் பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சம்மதித்தனர். அதனைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி, கூடலூர் வட்டார  மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: