புயலால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்படலாம்; 300 டன் ஆக்சிஜன் உடனே அனுப்புங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன்கையிருப்பு பெருமளவு குறைந்துவிட்டதால் மத்திய அரசு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கேரளாவில் ஆக்சிஜனுக்கு தேவை அதிகம் இருந்தும் தற்போது தினமும் 212.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய தொகுப்பு அனுப்பப்படுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் இன்றும் நாளையும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக கேரள ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மின் தடை ஏற்படலாம் என்றும் ஆக்சிஜன் விநியோகத்தில் கால தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் பினராயி குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் சூழலில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி உள்ள கேரள முதல்வர், அறிவியல் ரீதியான கேரளாவில் திரவ ஆக்சிஜனின் தினசரி தேவை அடுத்த 3 நாட்களில் 423.60 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கலாம் என்று கூறி இருக்கிறார். தற்போதைய நிலையில் கேரள மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பு 24 மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக பினராயி விஜயன் கூறியுள்ளார். எனவே கேரளாவுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 450 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ள பினராயி விஜயன் அண்டை மாநிலங்களில் உள்ள சேமிப்பு மையங்களில் இருந்து கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Related Stories: