படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: ஸ்டெர்லைட் ஆலையில் தயாரான ஆக்சிஜன் விநியோகம் துவக்கம்:நெல்லை அரசு மருத்துவமனைக்கு முதலில் 4.8 டன் அனுப்பப்பட்டது

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் கடந்த ஏப்.27ம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு ஆக்சிஜன் பிளாண்ட் தயார் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆய்வுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. நேற்று காலை வரை 4.8 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் காலை 7 மணிக்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட முதல் டேங்கர் லாரி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது. முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி அரசு மருத்துவமனைகளுக்கும் படிப்படியாக மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், பரிசோதனை முறையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முதலில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் 2 அல்லது 3 தினங்களில் நாள் ஒன்றுக்கு 10 மெட்ரிக் டன் வரை  உற்பத்தி செய்ய முடியும். பின்னர் இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படும்.  எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும் என்றார். தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த படுக்கைகளுடன் ஆக்சிஜன் வசதியும் அதிகம் தேவைப்படுவதால் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் முழுவதுமாக தமிழக தென்மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த ஆக்சிஜன் 98.62% தூய்மையானது என்றும்  ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: