கடலூர் முதுநகர் அருகே தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி: 14 பேர் படுகாயம்

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே குடிகாட்டில் சிப்காட் தொழிற்பேட்டையில், பூச்சி மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் கிரிம்ஸன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 50 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். நேற்று காலை 7 மணியளவில் பூச்சி மருந்துகளுக்கான மூலப்பொருள் கலக்கும் இயந்திரத்தை (பாய்லர்) பெண் ஊழியர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.  திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் மயங்கிக் கிடந்த தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காரைக்காடு பகுதியை சேர்ந்த சபிதா (35), செம்மண்டலம் பகுதியை சேர்ந்த கணபதி (25), பழைய வண்டிபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (42), பரங்கிப்பேட்டையை சேர்ந்த விசேஷராஜ் (25) ஆகியோர் பலியானார்கள். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்கிட உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக தொழிற்சாலைகள் இயக்கம் குறித்து விரிவான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். தொழிலாளர்களின் நலன் இதில் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. எனவே அரசு வழங்கிய வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை தீவிரமாக இருக்கும்’ என எச்சரித்தார்.

ஆலை சார்பில் தலா 15 லட்சம்: ஆலை நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க கோரி உறவினர்களும், அனைத்து கட்சியினரும் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து நேற்று மாலை, கடலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையில், நடந்த கூட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி உதவி

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தில், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கிரிம்சன் நிறுவனத்தில் நேற்று அமோனியா பாய்லர் வெடித்ததில் அமோனியா வாயு வெளிவந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>