×

1,600 மருந்தை 28 ஆயிரத்துக்கு ‘‘டீலிங்’’கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்க முயன்ற லேப் டெக்னீசியன்: பொறி வைத்துப் பிடித்தனர் மதுரை போலீசார்

மதுரை: மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவமனை லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில்  ₹1,600க்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் முறைகேடாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை செல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கிடைத்த ஒரு செல்போன் எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசியவர்,  மதுரை பைபாஸ் ரோட்டில் பாத்திமா கல்லூரி அருகே வந்தால், ஒரு பாட்டில் மருந்து ₹28 ஆயிரத்திற்கு வழங்குவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் மப்டியில் அங்கு சென்றனர். அங்கு நின்றிருந்த 2 பேர், மருந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். புரோக்கர் போல செயல்பட்ட மற்றொருவர் தப்பிவிட்டார்.

பிடிபட்டவர், மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த இம்ரான்கான் (24), செல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அவர், ‘‘ஒரு டாக்டரிடம் போனில் பேசி, அவர் ஒரு நபர் மூலம் மருந்துகளை தந்தார். டாக்டரை நேரில் பார்த்ததில்லை’’ என்றார். இம்ரான்கானிடமிருந்து 3 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை  கைது செய்த போலீசார், மருந்து விநியோகித்த டாக்டர், தப்பிச் சென்ற புரோக்கர் மற்றும் இந்த விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.

Tags : Madurai , Lab Technician tries to sell 1,600 drugs for Rs.
× RELATED மதுரையில் தொடர்மழை கிட்டங்கியில் உள்ள நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை