உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் கங்கை கரையில் புதைத்த 300 சடலங்கள்

உன்னாவ்: பீகார், உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையில் சடலங்கள் மிதந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் கங்கை கரை மணற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் தினமும் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், நாடு முழுவதும் மயானங்களில் சடலங்களை எரியூட்ட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மயானத்தின் வாசலில் மணிக்கணக்கில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய, பீகாரின் பக்சர் மாவட்டத்திலும், உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்திலும் கங்கை நதிக் கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவால் இறந்தவர்கள் சடலங்களை எரிக்க இடமில்லாமல் அவர்களது உறவினர்களே கங்கையில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், கொரோனா பலியை மறைக்க உபி அரசு இவ்வாறு சடலங்களை கங்கையில் வீசியிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.  பீகார் அதிகாரிகளும், உபியில் இருந்து இவ்வாறு சடலங்கள் கங்கையில் வீசப்பட்டிருப்பதாக புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு விடை தெரியாத நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் புக்சர் மற்றும் ரவுதாபூர் ஆகிய கிராமங்களில் கங்கை கரையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளன. கடந்த மாதம் மட்டும் கங்கை கரை மணற்பரப்பில் 300 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா பலி அதிகரித்து வரும் நிலையில், சடலங்களை எரியூட்ட செலவு அதிகரித்துள்ளது. மேலும், மரக்கட்டைகள் கிடைக்காததால், சடலங்களை கிராம மக்கள் புதைத்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு புதைக்கப்படும் சடலங்களை நாய்கள் தோண்டி கடித்து குதறி வரும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இனி அங்கும் சடலங்களை புதைக்க முடியாத அளவுக்கு முழு கரையும் நிரம்பி உள்ளது.n இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், ‘‘கங்கை கரையில் சடலங்கள்  புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபோல் வேறு இடங்களிலும் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்கிறோம். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதற்கிடையே, பீகாரில் கங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு அறிக்கை அளிக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமும் 12 சடலங்கள்புதைப்பு

உன்னாவ் மாவட்டம் கங்கை கரையை ஒட்டிய மக்கள் கூறுகையில், ‘‘கொரோனா ஆரம்ப கட்டத்தில் தினமும் 2-3 சடலங்கள் மட்டுமே இங்கு வந்து கொண்டிருந்தன. இப்போது தினமும் சராசரியாக 10-12 சடலங்கள் வருகின்றன. அவற்றில் ஒருசிலர் மட்டுமே எரிக்கின்றன. வசதியில்லாத நிறைய பேர் சடலங்களை புதைத்து விட்டு செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது’’ என்கின்றனர்.

Related Stories:

>