சீரம், பாரத்பயோடெக் அறிவிப்பு: ஆகஸ்ட்டில்தான் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு

புதுடெல்லி: வரும் ஆகஸ்ட் மாதம் தான் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இல்லாமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், 18-44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதை பல மாநிலங்கள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. மேலும், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் சர்வதேச டெண்டர் முறையில் தடுப்பூசியை கொள்முதல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனமும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளன. இது, தடுப்பூசி உற்பத்தி தொடர்பான அறிக்கையாகும்.

பாரத் பயோடெக்கின் இயக்குநர் கிருஷ்ண மோகன் அளித்துள்ள அறிக்கையில், ‘‘கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி ஜூலையில் மாதத்திற்கு 3.32 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 7.82 கோடியாகவும் அதிகரிக்கப்படும். செப்டம்பரிலும் அதே அளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும்’’ என கூறி உள்ளார். சீரம் சார்பில் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் அளித்த அறிக்கையில், ‘‘ஆகஸ்ட் மாதம் கோவிஷீல்டு உற்பத்தி 10 கோடியாக அதிகரிக்கப்படும். செப்டம்பரில் அதே நிலை நீடிக்கும். வரும் மாதத்திலும் ஓரளவு உற்பத்தி அதிகரிக்கப்படும்’’ என கூறி உள்ளார்.

ஆண்டு இறுதியில் 200 கோடி டோஸ்

இதற்கிடையே, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 75 கோடியும், கோவாக்சின் 55 கோடி டோசும் கிடைக்கும். இதன் மூலம் தடுப்பூசி தேவை பூர்த்தி செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: