கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக அதிகரிப்பு

புதுடெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான இடைவெளியை 12-16 வார காலமாக அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. நாட்டில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்க்கு இடையே 4-6 வார கால இடைவெளி முதலில் பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பின்னர் கடந்த மார்ச்சில் இரண்டாவது டோஸ்கான இடைவெளி 6-8 வாரங்கள் இருந்தால் மிகுந்த பயன்கிடைக்கும் எனஅறிவுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வதற்கான இடைவெளியை அதிகரித்து நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, தற்போது 12-16வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, நிகழ்கால ஆதாரங்களின்படி குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி எடுக்கப்பட்ட முடிவு என தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்க்கான கால இடைவெளியானது 4 வார காலமாகவே இருக்கின்றது.தேசிய தொழில்நுட் ஆலோசனைக் குழுவின் இந்த பரிந்துரை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அனுமதி தந்தது. மேலும், கர்ப்பிணிகள் தங்களுக்கான தடுப்பூசியை தேர்வு செய்து கொள்ளலாம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பிரசவத்துக்கு பின் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக குணமடைந்து 4-8 வாரங்கள் காத்திருந்து  2வது டோஸ் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், 6 மாதங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை டிஜிசிஐ அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனமானது 2 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரித்து அதற்கான முதல்கட்ட பரிசோதனையை மேற்கொண்டது. இந்த முடிவுகளை சமர்பித்து இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நிபுணர் குழுவானது 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாடு தணிக்கை அமைப்பு நேற்று அனுமதி அளித்துள்ளது.

‘ஒண்ணுமே புரியல’

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி அதிகரிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,” முதலில இரண்டாவது டோஸ்கான இடைவெளி 4 வாரமாக இருந்தது. அதன் பின்ன 6-8 வாரமாக மாற்றப்பட்டது. தற்போது 12-16வாரமாக அதிகரிக்கப்படுகின்றது. இது தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான இருப்பு இல்லாததாலா அல்லது தொழில்முறை அறிவியல ஆலோசனை கூறுவதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories:

>