தேவையில்லா விஷயங்களில் நம்மை திசை திருப்பி வெல்வதில் இந்தியர்கள் வல்லவர்கள்: ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் புலம்பல்

சிட்னி: ‘தேவையில்லாத விஷயங்களில் திசை திருப்பி போட்டிகளில் வெற்றி  பெறுவதில் இந்தியர்கள் வல்லவர்கள்’ என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் புலம்பியுள்ளார். சிட்னி நகரில்  நேற்று நடந்த  சேப்பல் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆஸ்திரலியா டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் பேசினார். அப்போது அவர், ‘இந்தியர்கள் எப்போதும்  விளையாட்டை தவிர தேவையில்லாத மற்ற விஷயங்களில் நமது கவனத்தை  திசை திருப்பி வெற்றி பெற முயற்சிப்பார்கள். அதனால்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்றால், அவர்களின் திசை திருப்பல் சவாலையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி வந்திருந்த அவர்கள் அதைதான் செய்து நம்மை திசை திருப்பினார்கள். அதனால்தான் உள்ளூரில் தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு சரியான உதாரணம், அந்த தொடரில் ‘கடைசி டெஸ்ட்டை  பிரிஸ்பேனில் ஆடப்போவதில்லை’ என்று சொன்னார்கள். அதனால் கடைசி டெஸ்ட் எங்கே நடக்கப்போகிறது என்று நாங்கள் யோசித்துக் கொண்டு இருந்தோம். இப்படி விளையாட்டு மீது இருக்கும் நமது கவனத்தை திசை திருப்பும் வித்தை காட்டுவதில்  இந்தியர்கள்  வல்லவர்கள்’  என்று கூறியுள்ளார்.

சாதனை படைத்த இந்தியா

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸியில் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது. கோஹ்லி தலைமையில் விளையாடிய முதல் டெஸட்டில்  ஆஸிதான் வென்றது. அதிலும் 2வது இன்னிங்சில் இந்தியா 36ரன்னில் ஆட்டமிழந்தது. கோஹ்லி முதல் டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பினார். காயம் காரணமாக  ஷமி, பும்ரா, உமேஷ், ஜடேஜா ஆகியோர் விலகினர்.  ேராகித், தவான், ஹர்திக் என முன்னணி வீரர்கள் இல்லை.  எஞ்சிய டெஸ்ட்கள் ரகானே தலைமையில் நடந்தன.  ஆனாலும் 2வது டெஸ்ட்டை  இந்தியா வென்றது. தொடர்ந்து 3வது டெஸ்ட்டை அஷ்வின், விகாரி இருவரும் போராடி டிரா ெசய்தனர். தொடர்ந்து 4வது டெஸ்ட்டை அறிமுக வீரர்கள் உதவியால் வென்ற இந்தியா தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் தான் முகமது சிராஜ், ஷூப்மன் கில், நவ்தீப் சைனி, டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமாயினர்.

     

மன்னிப்புக் கேட்ட பெய்ன்

திறமையால் ஆடி வென்ற இந்திய அணியை திசை திருப்பி வென்றது என்று டிம் பெயின் இப்போது புலம்பியுள்ளார். அவர்தான் களத்தில் எதிரணி வீரர்களை திசை திருப்பும் வேலைகளை எப்போதும் செய்வார். விக்கெட் கீப்பரான அவர் பேட்ஸ்மேன்களை கிண்டலடித்தும், கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பார். இந்தியா 2018ல்  ஆஸி சென்ற போதும் ரோகித்தை சீண்டியது சர்ச்சையானது. தொடர்ந்து இந்த ஆண்டு சிட்னி டெஸ்ட்டில் நீண்ட நேரம் களத்தில் நின்று சமாளித்த அஷ்வினையும், விகாரியையும் தொடர்ந்து வெறுபேற்றினார். அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவிக்கவே,  பெய்ன் மன்னிப்பு கேட்டார்.

ஆஸி வீரர்கள் அப்படிதான்

இப்படி எதிரணியை திசை திருப்புவது, வம்பு சண்டைக்கு இழப்பது போன்றவை வெற்றி பெற ஆஸி வீரர்கள் எப்போதும் கையாளும் பாராம்பரிய பழக்கம். இந்த ஆண்டு தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்து  கோஹ்லி இல்லாமல் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்று ஆஸி முன்னாள், இந்நாள் வீரர்களும்  தினமும் பேட்டிக் கொடுத்து இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்க வைக்கும் வேலைை செய்தனர்.  ஆனாலும் இந்தியர்கள் தொடரை வென்றது மட்டுமல்ல, பிரிஸ்பேனில் 33 ஆண்டுகளாக தோற்காத ஆஸியையும் தோற்கடித்தனர்.

Related Stories: