இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் காசாவில் 65 பாலஸ்தீனர்கள் பலி: 1000க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டு ஏவியதால் பதற்றம்

காசா: இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் மாறி மாறி ராக்கெட் குண்டுகளை ஏவி நடத்தி வரும் தாக்குதலில் காசா முனையில் குழந்தைகள் உட்பட 65 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 7 பேரும் பலியாகி உள்ளனர். கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையாலும், அல் அக்சா மசூதியில் கூட்டம் கூட கட்டுப்பாடு விதித்ததாலும் இஸ்ரேல் - காசா போர்முனையில் உள்ள பாலஸ்தீன தீவிரவாதிகளான ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக இரு தரப்பினரும் மாறி மாறி ராக்கெட் குண்டு மழை பொழிகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது வீசிய ராக்கெட் குண்டு வீச்சில் கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற நர்ஸ் பரிதாபமாக இறந்தார். கடந்த 4 நாட்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 1000 ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் நோக்கி ஏவியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை காலை 6 மணி முதல் நேற்று வரை சுமார் 180 ராக்கெட் குண்டுகளை ஏவியது.

இதில் 40 குண்டுகள் காசாவில் அரசியல் தலைவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் காசா நகர கமாண்டர் பசீம் இஸ்ஸா பலியாகி உள்ளார். மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 16 குழந்தைகள் உட்பட 65 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், 86 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட 365 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் 5 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு சைரன்கள் ஒலிப்பது வாடிக்கையாகி உள்ளது. காசா முனையில் 500க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் ஜெருசலேமில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 36 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

போர் மூளும் அபாயம்

2017ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வன்முறையை ஜெருசலேம் நகரம் தற்போது சந்தித்து வருகிறது. இதில் ஹமாஸ் ஏவிய 90% ராக்கெட்டுகளை நடுவானில் இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து வரும் இந்த மோதல் காரணமாக முழு அளவிலான போர் மூளும் அபாயம் இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

பைடன் ஆதரவு

இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘எனது எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் விரைவில் இஸ்ரேல் - காசா இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்பதுதான். அதே சமயம், தனது நாட்டின் மீது 1000 ராக்கெட்டுகளை ஏவும் போது, தற்காத்துக் கொள்ளக்கூடிய முழு உரிமையும் இஸ்ரேலுக்கு உள்ளது’’ என கூறி உள்ளார்.

இது ஆரம்பம்தான்

இஸ்ரேல் -ஹமாஸ் அமைப்பினர் மோதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இனி அவர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத சம்பவங்கள் நடக்கும்’’ என எச்சரித்துள்ளார்.

Related Stories:

>