ஆந்திராவில் சோதனை ஓட்டம் ஆக்சிஜனுடன் சிகிச்சை மையமான அரசு பேருந்து

திருமலை: ஆந்திராவில் படுக்கையுடன் கூடிய குளிர்சாதன அரசுப் பேருந்துகளில் ஆக்ஸிஜன் பொருத்தி பிராணவாயு ரதமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில் இரண்டு பேருந்துகள் பிராணவாயு ரதமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது. இந்த பேருந்துகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்காதவரை அவசர மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் 20 பேர் வரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு மினி தீவிர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் முதலில் ராஜமகேந்திரவரத்தில்  எம்.பி.பரத் நேற்று சோதனை ஓட்டமாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, எம்பி பரத் கூறுகையில், ‘‘ராஜமுந்திரி நகரில் முதல்முறையாக, கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருந்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இது வெற்றியடைந்த பிறகு  முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநிலம் முழுவதும் இதேபோல் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கு ஜெகன் அண்ணா பிராணவாயு ரதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: