போர்க்கால நடவடிக்கை எடுத்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உடனே இந்த அரசு கொரோனாவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனையை வழங்கி உள்ளது. பதவியேற்ற உடன் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ₹4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான இடவசதி, ஆக்சிஜன் இருப்பு ஆம்புலன்ஸ் தேவை போன்றவற்றை தனித்தனியாக முறையாக ஒருங்கிணைத்து இரவு பகல் பாராது கண்காணித்து மக்களுக்கு சேவை வழங்க ஒரு கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது.

ஆக்சிஜன் இருப்பை கண்காணிக்கவும், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதை உறுதி செய்யவும் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் வருவதை கண்காணிக்கவும் தொழில்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அது இயங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த மருத்துவ பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகையும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரிசா, மே.வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரவும் மத்திய அரசுக்கு இதுகுறித்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக பலன் கிடைத்துள்ளது. மேலும் ஆக்சிஜன் கொண்டு வரவும் அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் விவரங்களை ஓரிரு நாளில் அறிவிக்க இருக்கிறேன்.ரெம்டெசிவிர் மருந்து சென்னை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் தேவைப்படுவதால் முக்கிய நகரங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலருக்கு ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற மருத்துவ வகைகளில் பலருக்கு நம்பிக்கை  இருக்கிறது.

அதனால் பலனும் கிட்டுவதாக சொல்லப்படும் காரணத்தால் தாம்பரத்தில் இதற்காக தனி சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நான் 2 தினங்களுக்கு முன் போய் நேரடியாக பார்த்தேன். அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து அரசு மூலமாகவும், கொடையாளர்கள் மூலமாகவும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெறப்பட்டு வருகின்றது. மேலும், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் புதிதாக படுக்கைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நோய் தொற்றுக்கான சோதனை முடிவுகளை விரைந்து மக்களுக்கு தெரிவிக்கவும், சோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்தவும் ஆர்டிபிசிஆர் சோதனையை தனியார் மையங்களும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை விலை நிர்ணயம் செய்யும் குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட்டுள்ளேன். தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக  பல்வேறு சலுகைகளை இந்த அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது.  

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை இந்த குறுகிய சில நாட்களில் இந்த அரசு எடுத்து வருகிறது. பெருகி வரும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து, முழு வீச்சில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நம் மக்களை பாதுகாத்திட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்த அளவு பாதிப்புடன், இறப்புகளை பெருமளவில் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தளர்வுகளை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்த தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாமா? அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா? என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள். அனைவரும் இணைந்து நம் மக்களை காப்பாற்றிட தேவையான ஆலோசனைகள், கருத்துக்கள் உங்கள் தொகுதியில் இருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: