நோயாளிகளை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: தனியார் மருத்துவமனைகள் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதித்து, கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் முழு பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டுகளில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து செனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் 40 படுக்கைகளுடன் கொரோனா கவனிப்பு சிகிச்சை மையத்தையும், ரோட்டரி கிளப் அமைப்பு சார்பில் 30 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு, இலவச அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தையும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தன்னார்வ அமைப்பு சார்பில் 140 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னையுடன் இருப்பவர்களை அனுமதித்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்கு மூச்சு திணறல் வரும்போது அதற்கான ஆக்சிஜன் வசதி இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். எனவே தனியார் மருத்துவமனைகள் தங்களின் அடிப்படை மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்வது அவசியம். இதுபோன்ற சம்பவங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் குறை கூறவில்லை. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகள்தான் இப்படி செய்கின்றன.

அந்த மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசிடமிருந்து 419 டன் ஆக்சிஜன் வருகிறது. கூடுதலாக 100 டன் ஆக்சிஜன் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தினசரி 50 லிட்டர் எரிவாயு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் 850 படுக்கைகள்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இன்னும் ஒரிரு நாட்களில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 850 படுக்கைகளும் தயார் செய்யப்பட்டு விடும். ஆக்சிஜன் தட்டுபாட்டால், அங்கு படுக்கைகள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. நேற்று ரூர்கேலாவில் இருந்து 80 டன் அளவுக்கு ஆக்சிஜன் டேங்குகள் ரயில் மூலம் புறப்பட்டுள்ளது. அந்த ரயில் தமிழகம் வந்த உடன் ஓரளவு நிலைமை சீராகும். 21ம் தேதிக்கு பிறகு ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கூடுதலாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளனர். தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் வசதிகளையும் உருவாக்கி கொள்ள வேண்டும்.

Related Stories: