கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு: கொரோனா 2வது அலை தீவிரமடைவதுடன் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கும் சூழல்

* கருவுற்ற பெண்கள் 3,5,7,9வது மாதங்கள் பரிசோதனைக்கு வரலாம்

* மருத்துவர்கள் ஆலோசனை

சென்னை: கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் வருகை தராமல் 3,5,7,9 வது மாதத்தில் கருவுற்ற பெண்கள் பரிசோதனைக்கு வந்தால்போதும் என்று மருத்துவர்கள்  ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த 8 மாத கர்ப்பிணியான 32 வயதான மருத்துவர் சண்முகப் பிரியா கோவிட்-19 தொற்றால், சிகிச்சை பயனின்றி இறந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மூன்றில் இரண்டு கர்ப்பிணிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஐசியூவில் ஒரு கர்ப்பிணி கூட அனுமதிக்கப்படாத சூழலில், நடப்பாண்டில் கர்ப்பிணிகள் பலரும் ஆக்சிஜன் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதைக் காண முடிகிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் 23 பெண்கள் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 800 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டால் 200 பேருக்கு தற்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கர்ப்பிணி பெண்கள் உயிாிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் சூழல் இருக்கிறது. தற்போதைய கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் வருகை தராமல் 3,5,7, 9 வது மாதத்தில் மட்டும் பரிசோதனைக்கு வந்தால் போதும் என்று சில மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: