சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து 4 விமானங்களில் 500 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைப்பு : 1150 சிலிண்டர்கள் நாளை மறுநாள் வருகின்றன

சென்னை: சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து 4 இந்திய விமானப்படை விமானங்களில் 500 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை விமானநிலையம் வந்தன. அதை, தமிழக அரசு அதிகாரிகள் பெற்று, லாரிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 1150 சிலிண்டர்கள் துபாய் மற்றும் குவைத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் அந்த சிலிண்டர்களும் தமிழகம் வந்து சேர உள்ளன. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருகிறது. பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். தமிழகத்திலும் 30 ஆயிரத்துக்கும் மேல் தினமும் பாதிக்கப்படுகின்றனர். முன்பை விட இந்த முறை, அதிகமானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுகிறது. தேவைக்கு ஏற்றாற்போல தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை. கொரோனா சிகிச்சைக்கு குழு அமைக்கப்பட்டதுபோல, ஆக்சிஜன் தேவைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில், கூடுதல் செயலாளர் அருண்ராய், சிட்கா தலைவர் குமரகுருபரன் ஆகியோர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இவர்கள், தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தியபோது, தமிழகத்திற்கு ஆக்சிஜன் நிரப்ப காலி சிலிண்டர்கள் தேவைப்பட்டன. அதோடு தூத்துக்கு டியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கன்டெய்னர்கள் இல்லை. எல்லாம் பழைய சிலிண்டர்கள்தான் உள்ளன. இந்த சிலிண்டர்களை உடனடியாக தயாரிக்க முடியாது. இதனால், சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், கன்டெய்னர்களை வாங்க முடிவு செய்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சிலிண்டர் வாங்குவது குறித்த அறிக்கை கொடுத்தனர். உடனடியாக வாங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி சிங்கப்பூரில் இருந்து 128 காலி சிலிண்டர், கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது.

மேலும் 128 காலி சிலிண்டர்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டர்கள் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்பு அதிகாரிகள், அவற்றை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோல் நேற்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் மலேசியாவில் இருந்து இருந்து காலி 244 சிலிண்டர்கள் சென்னைக்கு வந்தன. இதன் மூலம் மொத்தம் 500 சிலிண்டர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மேலும் துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து 1150 சிலிண்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, அந்த நாட்டு அரசுடன் அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த அரசும் உடனடியாக தருவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் 1150 சிலிண்டர்கள் கப்பல் மூலம் இந்தியாவுக்கு வருகிறது. வருகிற 19ம் தேதி அல்லது 20ம் தேதி இந்த காலி சிண்டர்கள் தமிழகம் வந்து சேருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள 3 கம்பெனிகளிடம் இருந்து தினமும் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அதோடு, ஸ்டெர்லைட் நேற்று 5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கியது. நேற்று அந்த யூனிட்டில் பழுது ஏற்பட்டது. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் தினமும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜன் டேங்கருடன் ரயில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால், தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்கின்றனர் அதிகாரிகள்.

மேற்கு வங்கத்திலிருந்து தமிழகத்துக்கு ரயிலில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மேற்குவங்கம் துர்கா பூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் நேற்று இரவு வந்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு 444 டேங்கர்களில் 7115 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, இந்திய ரயில்வே இதுவரை விநியோகித்துள்ளது. நேற்று 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்தன. இதுவரை 115 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனது பயணத்தை முடித்துள்ளன.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 407, உ.பி.,க்கு 1960, மத்தியபிரதேசத்துக்கு 361, அரியானாவுக்கு 1135, தெலங்கானாவுக்கு 188, ராஜஸ்தானுக்கு 72, கர்நாடகாவுக்கு 120, டெல்லிக்கு 2758 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்குவங்கம் துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன், நேற்று இரவு வந்தது. இன்னும் பல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு நேற்று இரவு புறப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: