தமிழகத்தில் இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இணை நோய்கள் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக தமிழகத்தில் 40 வயதிற்கு கீழ் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் எந்த இணை நோய்களும் இல்லாதவர்கள் சிகிச்சை பலன் தராமல் உயிரிழக்க நேரிடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரியில் இணை நோய்கள் இல்லாமல் ஏற்படும் மரணங்கள் 18 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேகாலகட்டத்தில் 31 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களின் கொரோனா மரணம் 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களின் கொரோனா மரணம் 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மே வரை மொத்த மரணம் 28% வரை அதிகரித்த நிலையில் சராசரியாக 20 வயதுகளில் உள்ள 8 பேரும், 30 வயதுகளில் 35 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஸ்டீராய்ட் மருந்துகளை தன்னிச்சையாக எடுத்துக்கொள்வதும் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்க ஒரு காரணம் என்று மருத்துவர் ரவீந்திரன் குமரன் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களுடன் இளைஞர்களும் அதிக அளவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பது தொடர்பான அறிவியல் பூர்வமான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே வயதினை கருத்தில் கொள்ளாமல் அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: