தமிழகத்தில் முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், தினசரி சுமார் 20 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். தவிர, மருத்துவமனைகளில் உள்ள காலி இடங்களை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆக்சிஜன் சப்ளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து வசதிகளை கண்காணிக்க தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்த அனைத்து கட்சியும் முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் - 1

கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் - 2

நோய் தொற்று வேகமாக பரவி வரும் இக்கால கட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொது கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 3

 

நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால் கள அளவில் அனைத்து கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணியில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 4

நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக்குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 5

அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories:

>