×

கொரோனா வைரஸ் பாதிப்பால் உ.பி-யில் இதுவரை 2 அமைச்சர், 4 எம்எல்ஏ பலி: மேனகா காந்திக்கு தொற்று உறுதி

சுல்தான்பூர்: கொரோனா வைரஸ் பாதிப்பால் உத்தரபிரதேசத்தில் இதுவரை 2 அமைச்சர், 4 எம்எல்ஏக்கள் பலியாகி உள்ளனர். மேனகா காந்திக்கும் தொற்று உறுதியானதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்திக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவரது பிரதிநிதி ரஞ்சித் குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘மேனகா காந்திக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியானது. அதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்த பல நாட்களாக அவர், கொரோனா நோயாளிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, சுல்தான்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை பொருத்தமட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 6 எம்எல்ஏக்கள் இறந்துள்ளனர். அவர்களில் 2 அமைச்சர்களும் அடங்குவர். அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் 22 எம்எல்ஏக்கள், மேனகா உட்பட 4 எம்பிக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், வழக்கமான பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : UP ,Maneka Gandhi , Corona virus kills 2 ministers, 4 MLAs in UP so far: Maneka Gandhi confirmed infected
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...