தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம், தினசரி சுமார் 20 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

தவிர, மருத்துவமனைகளில் உள்ள காலி இடங்களை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆக்சிஜன் சப்ளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து வசதிகளை கண்காணிக்க தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாகவே பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அறிவுரைகளை வழங்கியுள்ளேன்; உங்கள் அனைவரின் ஆலோசனைகளை பெற இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் முக்கியமான 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான இடவசதி, சிகிச்சை, ஆக்சிஜன், இருப்பை கவனிக்க கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன், கான்சென்ரேட்டர் கருவிகள் பெறப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க புதிய மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என கூறினார்.

Related Stories: