இந்தியாவுடனான உலக சாம்பியன் ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த இறுதிப் போட்டி முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தாம் ஓய்வு பெறப்போவதாக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான பிஜெ வாட்லிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``நான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இதுவே சரியான நேரம். நியூசிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் நிச்சயமாக சில நல்ல தருணங்களை தவிர்க்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். குறிப்பாக ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டி விளையாடிவிட்டு, கடைசி நாளின் மாலைப் பொழுதில் மற்ற வீரர்களுடன் சேர்ந்து உணவு உண்பதை நிச்சயமாக நான் இழப்பேன். இனிவரும் காலங்களில் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் அதிகமான நேரத்தை செலவிட உள்ளேன். உலகத் தரம் வாய்ந்த பல வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர்களின் மூலமாக எனக்கு நிறைய உதவிகளும் கிடைத்தன, நான் எப்போதும் அதற்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்று அவர் கூறினார்.

வாட்லிங் நியூசிலாந்து அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3773 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 28 ஒரு நாள் போட்டிகளிலும் ,5 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் பிரெண்டம் மெக்கல்லமுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர் ஷிப் அமைத்த வாட்லிங், அந்த போட்டியில் 124 ரன்கள் அடித்ததோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியை தோல்வியிலிருந்தும் காப்பாற்றினார். தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியையே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்க வேண்டுமென்று அவர் முடிவு செய்துள்ளார்.

Related Stories: