தேர்தல் விநோதம்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இதுவரை மக்களவைத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிட்டதில்லை.மிசோரமில், ஒரே ஒரு மக்களவை தொகுதியே உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற 12 மக்களவை தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர்கள் கூட போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி மக்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆம். இந்த தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக லல்த்லா முனி என்ற 63 வயது  பழங்குடியின பெண் போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அப்பகுதி பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறார்.  திருமணமாகி குழந்தைகளும், ஐந்து பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இத்தேர்தலில் அவர்  சுயேட்சையாக களமிறங்கினார்.

லல்த்லா முனி கூறுகையில், `என் இனத்தின் நலன் காக்க, இந்த தேர்தலில் போட்டியிட, கடவுள்  உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன். மிசோரம் மாநில மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதில் பெருமையே’’ என்ற லல்த்லா முனிக்கு தேர்தலில் போட்டியிடுவது இது முதன்முறையல்ல.

ஏற்கனவே இவர், கடந்தாண்டு மிசோரம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அய்லாஸ் தொகுதியில் போட்டியிட்டார். அப்போதும் சுயேட்சையாக  போட்டியிட்ட  அவருக்கு 69 வாக்குகள் கிடைத்தது. இம்முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்கிறார். மக்களவைத் தேர்தலில், இவர் தவிர 5 ஆண்கள் போட்டியிட்டனர்.

ஆண் வாக்காளர்களை விட இம்முறை 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதாவது மொத்தமுள்ள 7,84,405 வாக்காளர்களில், 4.02,408 பேர் பெண்கள், 3,81,991 பேர் ஆண்கள். இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்த யூத பழங்குடியினர், மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். மிசோரமில், 20 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்.

தற்போது மிசோரம் மக்களவைத் தொகுதியில் துணிச்சலாக களமிறங்கியிருக்கும் லல்த்லாவும் இந்த யூத பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் உலக மக்கள் தொகையில் குறைந்து வரும், 10 யூத பழங்குடியினரில் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.“என்னை போன்ற படிக்காதவர்களே தேர்தலில் போட்டியிடும் நிலையில் படித்த இளம் தலைமுறை பெண்கள் அரசியலில் வந்து, என்னை விட சிறப்பாக செயல்படவேண்டும்” என அறிவுரை கூறுகிறார் லல்த்லா.

பா.கோமதி

Related Stories: