உண்டியல் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய பள்ளி சிறுமிகள்

கோவை: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று  ஏற்பட்டுள்ள இந்த  இக்கட்டான காலத்தில்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மக்கள்  தங்களால் முடிந்த நிதியுதவி  அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பலர்  நிதியுதவியை அளித்து  வருகின்றனர். கோவை, ஈரோட்டை சேர்ந்த பள்ளி சிறுமிகள் தாங்கள் சேமித்த உண்டியல் பணத்தை  முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு வழங்கியுள்ளனர். கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர்  பழனிச்சாமி. மின்வாரிய ஊழியர்.

இவரது மகள்  பிரணவிகா (7). தனியார்  பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி, கடந்த 6  மாதமாக பட்டுப்பாவாடை வாங்க உண்டியலில் சேமித்து  வைத்திருந்த பணத்தை  எடுத்துக்கொண்டு தனது தந்தையுடன் நேற்று ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐ.ஓ.பி.  வங்கி கிளைக்கு சென்றார். வங்கி ஊழியர்கள் முன்பு  உண்டியலை உடைத்து, அதில்  இருந்த ரூ.1,516 பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இது குறித்து சிறுமி பிரணவிகா கூறுகையில், ‘‘எனக்கும், என் தங்கச்சிக்கும்  பட்டுப்பாவாடை  வாங்க, நான் உண்டியலில் பணம் சேர்த்து வந்தேன்.

 

தற்போது  கொரோனாவால் நிறைய  பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ, இந்த நிதி  போய் சேரட்டும். பட்டுப்பாவாடை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.  இந்த நிதியை வழங்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி’’ என்றார். ஈரோடு மாணவி: ஈரோடு  இடையன்காட்டு வலசு  பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் மகள் தன்ஷிகா (8). இவர்  தனியார் பள்ளியில்  3ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை  ஆண்டாக தந்தை தரும்  பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார்.

இந்நிலையில்,  கொரோனா  பாதிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் நிதி வழங்கலாம் என தமிழக  முதல்வர்  மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து  தன்ஷிகா  நேற்று அவரது தந்தை சண்முகவேலுடன் ஈரோடு கலெக்டர் முகாம்  அலுவலத்திற்கு  வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்தார். அப்போது, தன்ஷிகா  அவரது உண்டியல்  சேமிப்பு பணம் ரூ.2,500ஐ கொரோனா நிவாரண நிதியாக  கலெக்டரிடம் வழங்கினார். இந்த நிதியை பெற்றுக்கொண்ட கலெக்டர், தன்ஷிகாவை  பாராட்டி வாழ்த்தினார்.

Related Stories: