×

ஊரடங்கால் 3வது நாளாக வெறிச்சோடிய சாலைகள் ட்ரோன் மூலம் போலீஸ் கண்காணிப்பு: கொரோனா அச்சமின்றி கார் பைக்குகளில் வலம் வரும் மக்கள்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 3ம் நாள் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. எனினும் கார், பைக்குகளில் அதிகம் பேர் உலா வருகின்றனர். இதை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை பரவலை தடுக்க, கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று 3ம் நாளாக முழு ஊரடங்கு காரணமாக பகல் 12 மணிக்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலை, நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை, நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - மதுரை சாலை ஆகிய சாலைகள் வெறிச்சோடின. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான், தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி, செய்துங்கநல்லூர், வசவப்பபுரம், தென்காசி மாவட்ட எல்லையான சிவகிரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். பகல் 12 மணி வரை மளிகை, பலசரக்கு, காய்கறி வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியம் 12 மணி வரை கார்கள், இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வலம் வருகின்றனர்.

பஸ், வாடகை வாகனங்கள் செல்ல அனுமதியில்லாத நிலையில் பலர் நேற்று சொந்த வாகனங்களில் சாலைகளில் பயணித்தனர். மேலும் சிலர் குடும்பத்தோடு ஒரே பைக்கில் 3 பேர் என அமர்ந்து சென்றனர். இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். கொரோனாவின் அச்சம் அறியாமல் கூட்டம், கூட்டமாக காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகளில் கூடுகின்றனர். இதனால் பல இடங்களில் சமூக இடைவெளி மாயமாகி விடுகிறது. நெல்லை வண்ணார்பேட்டை, பாளை. பஸ் நிலையம், மேலப்பாளையம் பைபாஸ் சாலை உள்ளிட்ட வாகனங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

காரணமின்றி வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். போலீஸ் சோதனை காரணமாக வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதல் 2 நாட்களை விட நேற்று அதிகளவில் கார்களின் வரத்து இருந்தது.  மருந்து கடைகள், அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஏன் வெளியில் சுற்றுகிறீர்கள் என அவர்களை போலீசார் எச்சரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் விதி மீறிய சிலர் மீது வழக்கு பதியப்பட்டது.

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டுள்ள தடுப்பு பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் வாகன போக்குவரத்தை கண்காணித்தனர். கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், ட்ரோன் கேமரா கண்காணிப்பு பணியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Tags : Drone patrolling deserted roads for the 3rd day in a row: People riding car bikes without fear of corona
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...