நிரம்பி வழியும் மருத்துவமனைகள் வேலூர் மாவட்டத்தில் 698 பேருக்கு கொரோனா தொற்று: படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்றும் 698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் 42 இடங்களிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிபிஎச் மருத்துவமனை, குடியாத்தம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 50 இடங்களிலும், 150 சிறப்பு முகாம்களிலும் கொேரானா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு மாநகராட்சியில் 4,500 பரிசோதனைகளும், மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் முதல் 7,500 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 734 ஆக இருந்தது, நேற்று சற்று குறைந்து 698 பேராக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் நோயாளிகளை அலைக்கழித்து வருவதாகவும், இவ்வாறு அலைக்கழிக்கப்படும் நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 765 ஆக தற்போதுள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும். ஏற்கனவே இந்த படுக்கைகளில் 350 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளது. மேலும் 400 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும்.

மாவட்டத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு அரசு மருத்துவமனைகள், வேலூர் இஎஸ்ஐ மருத்துவமனை என 6 மருத்துவமனைகளில் 1,130 படுக்கைகள் என்று உள்ளதை 2 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும், கோவிட் நல மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ள 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 200 படுக்கைகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகளை அலைக்கழிக்கும் சிக்கலுக்கு முடிவு கட்ட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பயன்பாடில்லாத வார்டுகள்

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் வேலூர் அரசினர் பென்ட்லண்ட்  மருத்துவமனையில் பயன்பாடில்லாமல் உள்ள பழைய எம்எஸ்1, எம்எஸ்2 வார்டுகள்  அடங்கிய கட்டிடத்தை சீரமைத்து கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்ற  வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாநகராட்சியில் அதிகம் தொற்று

வேலூர் மாநகராட்சியில் வேலூர் சைதாப்பேட்டை, ஓல்டு டவுன், சலவன்பேட்டை, சாயிநாதபுரம், புதுவசூர், சத்துவாச்சாரி, காட்பாடி தாராபடவேடு, கல்புதூர் என மக்கள் நெரிசல்மிக்க பகுதிகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. நேற்று வெளியான பட்டியலில் உள்ள எண்ணிக்கையான 698 கொரோனா தொற்று பாதித்தவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரிசோதனையில் பொய்யான தகவல்

வேலூர் உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை மறித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும்போது, சம்பந்தப்பட்டவரிடம் இருந்து அவரது மொபைல் எண், முகவரி கேட்டு பெறப்படுகிறது. அதேபோல் சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கும்போது, அவர்களது முகவரி, மொபைல் எண்ணை கேட்கும்போது அவர்கள் தவறான மொபைல் எண்ணையும், முகவரியையும் தருகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் மாநகராட்சியில் மட்டும் 30க்கும் மேற்பட்டவர்கள் தவறான முகவரியை தருகின்றனர்.  தவறான மொபைல் எண், முகவரி தருபவர்களின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு பாசிட்டிவ் என்று வரும்போது அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் நோய் தொற்று பாதிப்புடன்அவர்கள் நோய் பரப்பும் நபர்களாக மாறிவிடுகின்றனர். இது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும். எனவே, நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களில் சளி மாதிரி சேகரிக்கும்போதே சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண், முகவரியின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். வாகன எண்ணை குறித்துக்கொள்ள வேண்டும் அல்லது அவரது ஆதார் எண்ணை கேட்டுப்பெற வேண்டும்.

Related Stories: