சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேலூருக்கு 11 ஆயிரம் சித்த மருந்து பெட்டகம் வருகை: மதுரையில் இருந்து எடுத்து வந்தனர்

வேலூர்: கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 11 ஆயிரம் சித்த மருந்து பெட்டகம் நேற்று மதுரையில் இருந்து வேலூருக்கு வந்தது. இந்தியாவில் கொரோனா 2வது அலையால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழகத்தில் முதல் அலையில் இருந்து தற்போது வரை சித்த மருத்துவத்துறை மூலம் கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு இயற்கை மூலிகைகள் கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த நோயாளிகள் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு சித்த மருந்து பெட்டகம் வழங்க வேலூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. சித்த மருந்து பெட்டகம் கேட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து, மதுரை திருமங்கலத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு 20 ஆயிரம் சித்த மருந்து பெட்டகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்டமாக 9 ஆயிரம் சித்த மருத்து பெட்டகம் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது.  

அங்கிருந்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு அங்கு கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்றும் 2வது கட்டமாக 11 ஆயிரம் சித்த மருந்து பெட்டகம் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவ பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சித்தா கொரோனா சிகிக்சை மையங்களான விஐடி பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, கோவிட் மையங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சித்த மருந்து பெட்டகத்துடன் ஜிங்க் மாத்திரை, கால்சியம், வைட்டமின் மாத்திரைகளும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்களை தொற்றில் இருந்து காக்க பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: