×

போச்சம்பள்ளியில் தோட்டத்தில் பறிக்காமல் வீணாகும் மல்லிகை பூக்கள்: விவசாயிகள் கவலை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லிகை பூ, குண்டுமல்லி, முல்லை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தென்பெண்ணை ஆற்று படுகையான திம்மாபுரம், பெரியமுத்தூர், காவேரிப்பட்டணம், மலையாண்டஅள்ளி, புதூர், வேலம்பட்டி, குள்ளம்பட்டி, சந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் விவசாயிகளுக்கு வருவாயை ஈட்டி தரும் மல்லிகை பூக்கள், பெங்களூரு மார்க்கெட்டுக்கு தினமும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். இந்நிலையில், கொரோனா பரவலால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பூக்கள் அனுப்பி வைப்பது தடைபட்டுள்ளது. மேலும் திருமண சீசன் இல்லை என்பதாலும், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பூக்களை வாங்க ஆட்கள் இல்லை.

இதனால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை பூக்களை அறுவடை செய்யாமல், விட்டு வைத்துள்ளதால், பூக்கள் வெயிலில் காய்ந்து கீழே விழுந்து வீணாகி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Pochampally , Jasmine flowers wasted in the garden at Pochampally: Farmers worried
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...