தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை  மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்க்கே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று காலை சுமார் 7 மணி அளவில் தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனானது முதற்கட்டமாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து அங்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வந்த நிலையில் வேதாந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு 22-ம் தேதி அனுமதி வழங்கியது. மேலும் தூத்துக்குடியில் ஏப்ரல் 24-ம் தேதி மக்கள் கருத்து கேட்கும் கூட்டமும், 26-ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற்றது.

இதனை தொடந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த மே மாதம் 6-ம் தேதி அங்கு மின்சாரம் வழங்கப்பட்டு நேற்று இரவு முதலே அங்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யக் கூடிய அந்த ஆக்சிஜனானது 98.6 சதவிகிதம் சுத்தமானதாக இருப்பதாகவும், இதனை மருத்துவதத்திற்கு பயன்படுத்தலாம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் எடை கொண்ட திரவ ஆக்சிஜன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய 2,000 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் சூழ் நிலையில் முதற்கட்டமாக திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவுக்குள் மேலும் 5,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு  தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் மூலம் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிகிறது. நிலையை பொறுத்தவரையில் தனியார் மருத்துவமனை, மற்றும் கொரோனா மருத்துவமனைகளில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த திரவ ஆக்சிஜன் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிகிறது.

தொடர்ந்து இங்கு திரவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் இதன் முழு கொள்ளளவான 35 மெட்ரிக் டன் கொள்ளளவை இது உற்பத்தி செய்யபடும் என வேதாந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்தப்பணியில் சுமார் 250 ஊழியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சின் முழுவதையும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கலீல் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும், அப்போது தான் இங்குள்ள மக்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>