ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள்

சென்னை: ஓமந்தூரார் அரசு பொதுமருத்துவனையில் டென்ட் மூலம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்காலிக கொரோனா சிகிச்சை முகாம்கள் செயல்பட்டுவருகின்றன.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம்  அடைந்த கொேரானா வைரஸை, உலக அளவில் கவலையளிக்கும் வைரஸ் திரிபாக உலக சுகாதார  அமைப்பு அறிவித்துள்ளது.  இந்த வைரஸ் மும்மடங்கு எளிதில் பரவும் தன்மை  கொண்டது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில்  கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது எனவும் கூறியுள்ளது. குறிப்பாக  மகாராஷ்டிரா, ஆந்திரா வேரியண்டுகள் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று 30  ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று  மட்டும் 293 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு,  சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.

 தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மிக வேகமாக   நிரம்பிவருகின்றன. படுக்கைகள் கிடைப்பதற்கு பல மருத்துவமனைகளில் வெகு நேரம்  ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தீவிர நோயாளிகள் படுக்கைகள்  கிடைக்காமல் மரணமடைய நேரிடுகிறது.

இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் தற்காலிக சிகிச்சை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா  நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி செய்து சிகிச்சை அளிக்கப்படும்  என்று சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு பொதுமருத்துவமனையில் டென்ட் மூலம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: