சென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது: 17 ஆயிரம் பேர் சிகிச்சை

சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ஐந்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் பாதியளவுக்கும் மேல் அதாவது 17 ஆயிரம் பேர் இந்த 5 மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருவதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின்  எண்ணிக்கை 35,153 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 3,97,498 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட 3,57,069 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

 5,276 பேர்  உயிரிழந்துள்ளனர். 16,10,599 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 5 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையின் ஒட்டு மொத்த  பாதிப்பான 35 ஆயிரத்தில் இந்த 5 மண்டலங்களில் மட்டும் 17 ஆயிரம் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும், திருவிக நகர், வளசரவாக்கம் பகுதிகளில் 2  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த 15 மண்டலங்களில் இதுவரை 55.62% ஆண்களும், 44.38% பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ெதரிவித்துள்ளது.

நடுவயதுக்காரர்களே உஷார்...

கொரோனா 2ம் அலை பாதிப்பு எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் 9 வயதுக்குள் 2.29 சதவீதம்,  10-19 வயதுக்குள் 6.31 சதவீதம், 20-29 வயதுக்குள் 19.04 சதவீதம், 30-39  வயதுக்குள் 21.96 சதவீதம், 40-49  வயதுக்குள் 17.82 சதவீதம், 50-59  வயதுக்குள் 14.82 சதவீதம், 60-69 வயதுக்குள் 10.52 சதவீதம், 70-79  வயதுக்குள் 5.28 சதவீதம், 80 வயதுக்கு மேல் 2.11 சதவீதம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30-39 வயதினரே அதிகம் பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: