கோவாக்சினுக்கு மத்திய அரசு அனுமதி 2-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

புதுடெல்லி: கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதல் 18 வயதுக்குட்டோருக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி தந்துள்ளது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. 2வது அலை தீவிரமாக இருப்பதால் 3வது அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் எச்சரித்துள்ளார். அதில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியமாகி உள்ளது. இந்நிலையில், 2 வயது முதல் 18 வயதுக்குட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி முதல்கட்ட மருத்துவ பரிசோதனையை அந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

முதல்கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளை சமர்பித்து இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனமானது மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நிபுணர் குழு, 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 2வது பரிசோதனை முடிவுகளை கொடுத்த பிறகு 3வது மற்றும் கடைசி கட்ட பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை, டெல்லி, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை, நாக்பூர் மேட்ரினா மருத்துவ அறிவியல் மருத்துவமனை ஆகியவற்றில் 525க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

Related Stories: