இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் கேரள பெண் நர்ஸ் பரிதாப பலி: கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது சோகம்

காசா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவிய ராக்கெட் குண்டுவீச்சில் கேரளாவை சேர்ந்த பெண் நர்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். கணவருடன் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜெருசலேம் நகரில் உள்ள அக் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இஸ்ரேல் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காசா போர் முனையை வசப்படுத்தியுள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

கடந்த இரண்டு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் விமானப்படை காசா முனையில் குண்டு மழை பொழிகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளும் இஸ்ரேலின் டெல் அவிவ்வ் மற்றும் பீர் ஷேபா நகரங்கள் மீது நேற்று முன்தினம் சுமார் 200 ராக்கெட் தாக்குதலை நடத்தினார்கள். இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் கேரள பெண் நர்ஸ் பலியாகி உள்ளார். இஸ்ரேலின் அஷ்கெலான் நகரில் இருக்கும் குடியிருப்பு ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் அங்கு வசித்த கேரளாவை சேர்ந்த சவுமியா(31) என்ற பெண் நர்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் சவுமியா, இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தார். ராக்கெட் தாக்குதலில் அவரது வீடு தரைமட்டமாகி சேதமடைந்ததோடு சவுமியாவும் பலியானார்.

காசா மீது இஸ்ரேல் நேற்று 100க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் காசாவில் இருந்த பல அடுக்கு மாடி கட்டிடம் தரைமட்டமானது.  இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், ‘‘வான் வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக ராக்கெட் ஏவும் இடங்கள், ஹமாஸ் அலுவலகம் மற்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்” என்றார்.

கடந்த 2014ம் ஆண்டு காசாவில் நடந்த தாக்குதலுக்கு பின் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். நிலைமை கட்டுக்கடங்காலை செல்வது சர்வதேச சமூகத்தின் கவலையை அதிகரித்துள்ளது.  

* 2 மாதத்தில் கேரளா வர திட்டமிட்டிருந்தார்

இஸ்ரேலின் அல்கிஷான் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கேரளாவில் இருக்கும் தனது கணவருடன் சவுமியா வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராக்கெட் சவுமியாவின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அவரது அலறல் சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டுடுள்ளது. அதே பகுதியில் இருக்கும் சவுமியாவின் உறவினர் மூலமாக சவுமியா வீட்டிற்கு சென்று பார்த்தபோது ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்து சவுமியா உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த சவுமியா கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் நர்சாக பணியாற்றி வருகின்றார். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா, இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டு இருந்ததாக தெரிகின்றது.

* மத்திய அரசு இரங்கல்

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் சவுமியா குடும்பத்தினருக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த 31 வயதான செவிலியர் சவுமியா சந்தோஷ் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்த சவுமியா குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வெளியுறவுத் துறை தயாராக உள்ளது’ என கூறி உள்ளார். மேலும், இஸ்ரேஸ், ஹமாஸ் தீவிரவாதிகள் இரு தரப்புக்கும் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

* 43 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் காசாவில் 13 குழந்தைகள் உட்பட 43 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 300 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: