×

கொரோனாவிலிருந்து மீண்டாலும் முடியாத சோதனை மிரட்டும் மியூகோர்மைகோசிஸ்! கண்களை மட்டுமல்ல உயிரையும் பறிக்கிறது

கொரோனாவிடமிருந்து போராடி மீண்டாலும் சிலருக்கு சோதனை முடிவதில்லை. பலவீனமானவர்களை தாக்கும் மியூகோர்மைகோசிஸ் எனும் ‘கறுப்பு பூஞ்சை’ கண்களை பறிக்கிறது, சிலரின் உயிரையும் எடுத்து விடுகிறது. மிகக் கொடிய இந்த பாதிப்பு இந்தியாவில் கொரோனாவுடன் சேர்ந்து மெல்ல மெல்ல வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா 2வது அலை மிகக் கொடூரமாக இருந்து வருகிறது. பல குடும்பங்களை அனாதையாக்கி வரும் இந்த கொடூர வைரசிடமிருந்து பலரும் போராடியே விடுபடுகின்றனர். கொரோனாவிலிருந்து மீண்டாலும் நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல் என பிற நீண்ட கால பாதிப்புகள் பலருக்கு ஏற்படுகிறது. அந்த வரிசையில் மிக பயங்கரமான துணை பாதிப்பாக மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

* மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?
மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. எல்லோரது உடலுக்குள்ளும் இவை சென்றாலும் அவை தொற்றை ஏற்படுத்துவதில்லை. காரணம் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல். நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்குக் குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது. காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்த மனிதர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து சைனஸ் மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. கவனிக்காமல் விட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது இந்தப் பாதிப்பு.

கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெறுவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் அதிக சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கொரோனாவிலிருந்து வெளியே வருகின்றனர். ஆனால் அதன்பின்னர் இரு வாரங்களில் அவர்கள் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சர்க்கரை அளவை இந்த பூஞ்சை அதிகரிப்பதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் உயிரிழப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இதனால் பலருக்கு கண்களை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.

* மகாராஷ்டிராவில் 2000 பேருக்கு பாதிப்பு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு மியூகோர்மைகோசிஸ் பாதிப்பால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தானே மாவட்டத்தில் 2 பேர் நேற்று மியூகோர்மைகோசிஸ் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இந்த பாதிப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

* ஆம்போதெரிசின் மருந்து உற்பத்தி அதிகரிக்க உத்தரவு
கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆம்போதெரிசின் பி மருந்து வழங்கப்பட்டு வருகிது. இது பூஞ்சை காளான் மருந்தாகும். தற்போது மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த மருந்தின் தேவையும் பல மடங்கு அதிகமாகி உள்ளது. எனவே ஆம்போதெரிசின் பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* அறிகுறிகள் என்னென்ன?
ஆரம்ப கட்டத்தில் கன்னம், கண் பகுதிகளில் வலி ஏற்படும், மூக்கிலிருந்து ரத்தம் ஏற்படும் அப்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், பல் வலி, காட்சிகள் மங்கலாகவும் இரட்டையாவும் தெரிவது, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை தவிர மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவையும் மியூகோர்மைசிஸ் அறிகுறிகளாகும். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த நோய் பரவாது. எதிர்ப்பு சக்தி குறைந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை உடனடியாக அணுகவேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவர் அனுமதி இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் சரியான அளவிலான ஸ்டீராய்டுகள் சரியான காலத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதே பூஞ்சைத் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும் என்கின்றனர் நிபுணர்கள். நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும், அவர்களுக்கு சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

Tags : Tested intimidating mycorrhizal mycorrhizal irreversible from the corona! It kills not only the eyes but also the life
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...