பிரியங்கா காந்தி கண்டனம் தடுப்பூசி இல்லாமலேயே திருவிழா கொண்டாடுவதா?

புதுடெல்லி: ‘தடுப்பூசிகளுக்கு ஏற்பாடு செய்யாமலேயே தடுப்பூசி திருவிழாவை அரசு கொண்டாடுகிறது’ என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. இதில் ஏப்ரல் 11 முதல் 14 வரையிலான நாட்களில் அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த 4 தினங்களை திகா உத்ஸவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு அறிவித்தது. அப்போதிலிருந்தே நாடு முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஏப்ரலில் திகா உத்ஸவ் என்று அரசு கொண்டாடியது.

தற்போது 30 நாட்கள் கழிந்து மே 12-க்கு வந்துள்ளோம். ஆனாலும், தடுப்பூசிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு முழுமையாக செய்யவில்லை. இதனால் தடுப்பூசி போடும் திட்டத்தில் 82 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளோம். மோடிஜி தடுப்பூசி தொழிற்சாலைகளுக்கு செல்கிறார். அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன்? அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்திய தடுப்பூசி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பேற்பது? இதனால் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது அசாத்தியமாகியுள்ளது’ என்று கூறி உள்ளார்.

Related Stories: