லண்டன்: மான்செஸ்டர் யுனைடட் தோல்வியால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது. இங்கிலாந்தின் முக்கிய கால்பந்து போட்டியான இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் 20 அணிகள் களம் கண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் இப்போது 35, 36வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடட்-லெஸ்டர் சிட்டி அணிகள் மோதின. அதில் யுனைடட் அதிரடி காட்டினாலும் லெஸ்டர் தான் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தோல்வியின் மூலம் மான்செஸ்டர் யுனைடட் சாம்பியன் கனவு கலைந்தது. அந்த அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 70 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் வென்றிருந்தால் 73 புள்ளிகளுடன் சாம்பியன் வெல்லும் வாய்ப்பில் நீடித்திருக்கும்.