மதுரை தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய 5 மணிநேர காத்திருப்பு: வைரஸ் பரவும் என உறவினர்கள் அச்சம்

மதுரை: கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மதுரையில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனாவால் ஒன்று, இரண்டு என இருந்த இறப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக 16 பேர் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர பலதரப்பட்ட நோய்களாலும், விபத்து, தற்கொலை என பல்வேறு நிலைகளிலும் இறப்பவர்களின் பட்டியல் தினமும் 50 பேர் வரை இருக்கிறது. கொரோனாவால் இறப்பவர்களின் உடல், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக உரிய வழிகாட்டுதல்படி, தகனம் செய்யப்படுகிறது.

மதுரையில் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இடங்களில் உள்ள மின் மயானங்களுக்கு மட்டும் தினமும், மதுரை, அருகாமை மாவட்டங்களில் இருந்து தலா 20க்கும் அதிக உடல்கள் எரியூட்டுவதற்காக கொண்டு வரப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு உடல் எரியூட்ட முடியும் என்பதால், உறவினர்கள் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கீரைத்துறை மின் மயானத்திற்கு உறவினர் உடலை தகனம் செய்ய வந்திருந்த கணேசன் என்பவர் கூறும்போது, ‘‘கொரோனாவால் பலியானவரின் உடலை தகனம் செய்ய குறைந்தது 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கொரோனா பாதித்த உடல்களை அப்படியே போட்டு வைத்திருப்பதும் ஆபத்தானது. ஒரே நேரத்தில் பல உடல்களை எரியூட்டும் வகையில் வசதிகளை மாநகராட்சி மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>