நிபுணர்கள் தகவல் 2வது டோஸ் தடுப்பூசி போட தாமதமா... கவலை வேண்டாம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் போட குறிப்பிட்ட காலக்கெடு தாண்டினாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி பெரும்பாலான இடங்களில் கிடைப்பதில்லை. இதனால், முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 2வது டோஸ் கிடைக்காமல் தவிக்கின்றனர். கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு 4-6 வாரங்கள் கழித்து 2வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி 8 வாரத்திற்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென அதன் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

இந்நிலையில், பற்றாக்குறையால் இந்த காலக்கெடுவை தாண்டியும் பலருக்கு தடுப்பூசி கிடைக்காமல் உள்ளது.

இது குறித்து, நோய்தடுப்பை தொடர்ந்து பாதகமான நிகழ்வுகள் பற்றிய தேசிய குழு உறுப்பினர் என்.கே.அரோரா கூறுகையில், ‘‘2வது தடுப்பூசி போட 8-10 வாரங்கள் இடைவெளி அதிகரித்தாலும், அதனால் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவரை முதல் டோஸ் போட்டதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நீடித்திருக்கும். எனவே, 2வது டோஸ் போட தாமதமானதால் மீண்டும் முதல் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என கூறி உள்ளார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்சை சேர்ந்த டாக்டர் வினிதா பால் கூறுகையில், ‘‘முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4-5 மாதம் வரை நீடிக்கும். சர்வதேச ஆய்வுகளில் கூறப்பட்ட தகவலின்படி, கோவாக்சின் தடுப்பூசி 2வது டோஸ் 4-12 வாரத்திற்குள் போட்டுக் கொள்ளலாம். எனவே முதியவர்கள் அவசரம் காட்ட வேண்டாம். தடுப்பூசிக்காக கூட்டத்திற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

Related Stories: