பேரிடர் காலத்தில் பிரமிக்க வைக்கும் பேருதவி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ சேவை: போன் செய்தால் உடனே வருகை; மதுரை வாலிபரின் மனிதநேயம்

மதுரை: கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி அனைத்து நோயாளிகளையும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு தனது ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் இலவச சேவையை இந்த பேரிடர் காலத்தில் சாமானியரான மதுரை ஆட்டோ டிரைவர் செய்து வருவது பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் குருராஜ் (35). மனைவி, மகன், மகள் உள்ளனர். பத்தாண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், கொரோனா காலத்தில் களமிறங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். ஏற்கனவே, கொரோனா முதல் அலை காலத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, ஆட்டோ சேவையுடன், இலவசமாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது துவங்கி, தொற்று பாதித்த இடங்களுக்கு சென்று அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு பொருட்கள் வாங்கித் தருவது வரை பலதரப்பட்ட சேவைகளை செய்தார்.

தற்போதைய இரண்டாம் அலை காலத்தில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் ஆட்டோக்களுக்கு அனுமதியற்ற சூழலில், கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாது அனைத்து நோயாளிகளையும் மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்லும் இலவச வாகனமாக தனது ஆட்டோவை மாற்றி சேவையாற்றி வருகிறார். அதோடு பயணிக்க வழியின்றி தவிப்பவர்களை ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதென எந்த கட்டணமும் பெறாமல் செய்கிறார்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் குருராஜ் கூறுகையில், ‘‘நானும், நண்பர்களும் இணைந்து துவக்கத்தில் ரத்ததானம் செய்ததில், பெரும் மகிழ்ச்சி கிடைத்தது.

அப்போது துவங்கி எந்த வகையிலாவது மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறேன். ஆட்டோ ஓட்ட அனுமதியற்ற இந்த சூழலில், வீட்டில் சும்மா நிறுத்தி வைப்பதை விட, கொரோனா காலத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடிவெடுத்தேன். மாவட்ட நிர்வாக அனுமதியுடன் உடல்நலமற்றவர்களையும், கொரோனா பாதித்தவர்களையும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு தினமும் 4 பேர் வரையாவது இலவசமாக மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்த்து வருகிறேன். மதுரையில் உள்ளவர்கள் என்னை செல்போனில் அழைத்தால் (செல்போன் எண்: 97891 00840) இலவச உதவி வழங்குவேன்’’ என்றார். இவரது சக ஆட்டோ டிரைவர் அன்புநாதன் (40) என்பவரும் இவருடன் இணைந்து தற்போது இந்த சேவையை செய்ய துவங்கியுள்ளார். ஆட்டோ ஓட்ட அனுமதியற்ற இந்தச் சூழ்நிலையில், வீட்டில் அதை சும்மா நிறுத்தி வைப்பதைவிட, கொரோனா காலத்தில் மருத்துவ உதவி தேவைப்படும்

மக்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடிவெடுத்தேன்.

Related Stories:

>