சேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் பலி: கடைசி நேரத்தில் வருவதால் பரிதாபம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாவட்டத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகளும் நிரம்பி உள்ளது. தனியார் மருத்துவமனைகள், தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மேல் சிகிச்சை எனக்கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்படி திடீரென வருபவர்களுக்கு படுக்கைகள் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது.

இதனால் நோயாளிகள் ஆம்புன்சிலேயே ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, ஆம்புலன்சிலேயே கடந்த வாரம் 3பேர் இறந்தனர். அதேபோல நேற்றும் வளாகத்திலேயே சிகிச்சை பெற்ற 3 பேர் உயிரிழந்தனர். சேலம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மாநகர பகுதியை சேர்ந்த 45 வயது ஆண், 55 வயது பெண் ஆகியோர் இப்படி பலியாகி உள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘ தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே நோயாளிகள் பற்றி அரசு மருத்துவமனைக்கு தெரிவித்தால் தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்ய முடியும். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நோயாளிகளை அனுப்பி வைப்பதால் படுக்கைகள் ஒதுக்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதற்குள், உயிரிழப்பு ஏற்படுகிறது’’ என்றனர்.

Related Stories: