கொரோனா பரவலை கட்டுப்படுத்த 8 பரிந்துரை: 12 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்: மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் 8 பரிந்துரைகளுடன் 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், பிரதமருக்கு புதிய வீடு கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தை  நிறுத்தி அதற்கான நிதியை கொரோனா பரவல் தடுப்பு பணிக்கு பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகின் முன்னணி நிபுணர்கள் பலரின் எச்சரிக்கையையும், உள்நாட்டு நிபுணர்களின் எச்சரிக்கையையும் மத்திய அரசு கேட்கத் தவறியதால், இந்தியாவில் கொரோனா 2வது அலை கொடூர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இக்கடிதத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத  காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), உத்தவ் தாக்கரே (சிவசேனா தலைவர்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி) உள்ளிட்ட தலைவர்கள்  கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில், ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் நாங்கள் தனியாகவும், கூட்டாகவும் பலமுறை உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக மத்திய அரசு எங்கள்  எல்லா பரிந்துரையையும் நிராகரித்து விட்டது, புறக்கணித்து விட்டது. இதனால்,  ஒரு பேரழிவு மனித துயரத்தை அடைவதற்கான நிலைமையை அதிகப்படுத்தியது’’ என கூறி உள்ளனர். அதோடு கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய 8 பரிந்துரைகளையும் கூறியுள்ளனர். அவை,

 * உலகளாவிய மற்றும் உள்நாட்டில் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

* நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்த உரிமம் வழங்க வேண்டும்.

˜*  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியை தடுப்பூசி கொள்முதலுக்காக பயன்படுத்த வேண்டும்.

˜* மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தி, அதற்கான பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர், தடுப்பூசி வாங்க வேண்டும்.

 * பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்  செய்ய வேண்டும்.

 * வேலையில்லாதோருக்கு மாதம் ரூ.6000 வழங்கிட வேண்டும்.

˜* தேவைப்படுவோருக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

* விவசாயிகளைகாக்க வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: