ரயில்வே கொரோனா வார்டில் காது கேளாத நோயாளிகளின் இதயத்தை வென்ற செவிலியர்: ஆன்லைனில் ‘சைகை’ மொழியை கற்று மருத்துவ சேவை

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் காது கேளாத கொரோனா நோயாளிகளிடம் தான் கற்ற சைகை மொழியில் மருத்துவ சேவை வழங்கும் செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கொரோனா தொற்றுநோயின் முன்களப்பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களும் பல நேரங்களில் தங்களது வாழ்க்கையையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுவாதி என்ற செவிலியர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணித்து வருகிறார். நோய் பாதிப்பு ஏற்பட்டதால், மிகவும் பலவீனமாக மற்றும் பேசமுடியாத, காது கேட்காத நோயாளிகளிடம், அவர்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியவில்லை, அதனால், அவர்களுக்காக சைகை மொழியை கற்று, அதன் மூலம் நோயாளிகளுக்கு அவர் மருத்துவ சிகிச்ைச அளித்து வருகிறார்.

சுவாதியின் இந்த வீடியோவை, இந்தியன் ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவரை பாராட்டியுள்ளது. அதில், ‘மனிதனிடம் உள்ள இரக்கத்திற்கும், கடமைக்கும், தொழில் பக்திக்குமான மிகவும் தனித்துவமான எடுத்துக்காட்டு! சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில்  உள்ள ரயில்வே மருத்துவமனையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட காது கேளாத  நோயாளிகளிடம், செவிலியர் சுவாதி சைகை மொழியில் மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார். இதன் மூலம் நோயாளிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரயில்வே மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘தனது வார்டில் அனுமதிக்கப்பட்ட காது கேளாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, அவர்களின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்து கொள்ள முடியாமல் செவிலியர் சுவாதி சிரமங்களை சந்தித்தார். அதனால், ஆன்லைன் மூலம் சைகை மொழியைக் கற்றுக் கொண்டார். அதன்பின், காதுகேளாத மாற்றுத்திறன் நோயாளிகளுடன் உரையாடி, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குகிறார். சுவாதியின் இந்த முயற்சியானது, காது கேளாத நோயாளிகளின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், ரயில்வேயும் அவரது முயற்சிகளைப் பாராட்டியுள்ளது’ என்றனர்.

Related Stories:

>