×

கொரோனா 2வது அலை: இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

மதுரை: மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து ஆக்ஸிஜன் கம்பெனிகள் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

எனவே இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

Tags : Corona ,India ,Supreme Court ,Maduro , Corona 2nd wave: We have no authority to declare medical emergency in India ..! High Court Madurai branch opinion
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...