காக்காவேரி ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-காட்சி பொருளானது புதிய தொட்டி

ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த காக்காவேரி ஊராட்சியில், தூண்கள் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, பணிகள் முடிந்து ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் உள்ள புதிய தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராசிபுரம் அடுத்த காக்காவேரி ஊராட்சியில், 8வது வார்டு பகுதியில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொட்டியின் தூண்கள் சேதமடைந்து வருகின்றன.

சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து விட்டது. கம்பிகள் வெளியே தெரியும் நிலையில். எந்த நேரமும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கீழே விழும் அபாயம் உள்ளது. இதற்கு மாற்றாக சில ஆண்டுக்கு முன்பு புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனால், புதிய தொட்டியும் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காக்காவேரி 8வது வார்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘பழைய தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. அங்கு, குழந்தைகள் சென்று விளையாடி வருவதால், ஆபத்து ஏற்படும் முன்பாக  ஊராட்சி நிர்வாகம் தொட்டியை இடித்து அகற்றிட வேண்டும்.  மேலும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஓராண்டுக்கும் மேலாக கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வராத,  புதிய  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>