சேத்துப்பட்டு கொரோனா வார்டில் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய பெற்றோர்-மருத்துவக்குழுவினர் ஏற்பாடு

சேத்துப்பட்டு :  திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, ஆரம்ப கட்ட தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, கொம்மனந்தல் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் வயது தம்பதி மற்றும் அவர்களது ஒரு வயது ஆண் குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கொரோனா வார்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அந்த இளம் தம்பதியினர் மிகவும் சோகமாக காணப்பட்டனர். அவர்களிடம் மருத்துவ அலுவலர் விசாரித்தார். அப்போது அவர்கள், இன்று (10ம் தேதி) எனது மகனுக்கு முதல் பிறந்த நாள். எனவே, அவனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். திடீரென கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டோம். இதனால் எங்களது மகனின் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போனது என சோகத்துடன் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், பிறந்த நாள் கேக் மற்றும் இனிப்புகளுடன் வந்த மருத்துவ அலுவலர், அந்த இளம் தம்பதியிடம் உங்களது குழந்தையின் பிறந்த நாளை இங்கேயே கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் என தெரிவித்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினருடன் சேர்ந்து அந்த தம்பதி தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். மேலும், பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்த மருத்துவ அலுவலருக்கு அந்த தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>