பெரணமல்லூர் பகுதிகளில் பட்டப்பகலில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர் :  பெரணமல்லூர் பகுதிகளில் பட்டப்பகலில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரணமல்லூர் அடுத்த நாராயணமங்கலம், மேல்சாத்தமங்கலம், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு பகுதிகள் வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்று படுகையில் மணல் கடத்தல் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:பெரணமல்லூர் ஒன்றிய பகுதிகளில் வழியாக செல்லும் செய்யாற்று படுகையில் மாட்டு வண்டிகள் மூலம்  மணல் கடத்தல் நடந்து வருகிறது. ஆவணியாபுரம் பகுதியில் இரவு நேரத்திலும்,  முனுகப்பட்டு பகுதியில் பகல் நேரத்திலும் மணல் கடத்தப்படுகிறது.

குறிப்பாக, முனுகப்பட்டு பகுதியில் கடத்தப்படும் மணல் திருமணி ஏரிக்கரை, கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இடத்தில் பகலில் குவித்து வைக்கின்றனர். பின்னர், இரவு நேரங்களில் சேத்துப்பட்டு, ஆரணி, விண்ணமங்கலம் பகுதியில் இருந்து வரும் லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது.‌

இப்பகுதியில் கொள்ளை போகும் மணல் வளத்தை தடுக்க அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் கொடுத்து வருகிறோம். அந்த நாட்களில் மட்டும் மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் வழக்கம்போல் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க என்ன  செய்வதென்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், தொடர் புகார் காரணமாக பெரணமல்லூர் போலீசார் நேற்று மதியம் முனுகப்பட்டு பகுதிக்கு சென்று, மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை விரட்டி பிடித்தனர். ஆனால், போலீசார் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் மாட்டுவண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>